Tuesday, February 8, 2011

தென்னை மரம் - ஒரு குவா குவா கதை

நதியோரம் சாமரம் வீசும் தென்னை மரங்கள், எழில் பொங்க தண்ணீரை வாரித் தெளிக்கும் Water fountain .. எல்லாமே தோற்றுப் போகும்… அவற்றின் சாயலில் இருக்கும் என் செல்லக் குட்டியுடைய உச்சிக் குடுமியின் அழகின் முன்னால்.

அவள் குடுமியின் அழகை ரசித்து எல்லோரும் அதை தென்னை மரம் என்றே அழைப்பார்கள். கேலி செய்கிறார்கள் என்று கூட புரியாமல் அவளும் குடுமியை தென்னை மரம் என்றே சொல்லுவாள்.

தலையில் தேங்காய் எண்ணெய் தடவி, உச்சியில் குடுமி போட்டு அதைச் சுற்றி பூவையும் வைத்து விட்டால் ஆசையாய் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொள்வாள் என் செல்ல மகள்.

அன்று காலையில் சமையற்கட்டில் தேங்காய் துருவிக் கொண்டிருந்தேன். விளையாடிக் கொண்டிருந்தவள் ஓடி வந்து

“அம்மா எனக்குத் தேங்காய்” என்றாள்.

“ஆ… காட்டு டா செல்லம்..” என்றேன்.

“அம்மா கைல தா.. இந்த கைலையும் தா” என்று இரு கைகளிலும் வாங்கிக் கொண்டாள்.

தேங்காயை தின்று கொண்டே தலையில் உள்ள தென்னை மரத்தை தடவிப் பார்த்துக் கொண்டாள். தேங்காய்ப் பூ முடியில் ஒட்டிக் கொண்டது. அது சரி… தேங்காய்ப் பூ தென்னை மரத்தில் பூப்பது தானே முறை.

என் கன்னுக் குட்டி சாப்பிடும் போது எல்லாம் சில உணவு துகள்கள் தென்னை மரத்தில் கூடு கட்டி குடியேறும்… அவள் மதிய வேளையில் சேட்டையை எல்லாம் கொஞ்சம் மூட்டைக் கட்டி வைத்து விட்டு தன்னை அறியாமல் துயில் கொள்ளும் போது ஈ.. எறும்புகளுக்கு எல்லாம் படியளக்கும் அட்சயப் பாத்திரமாகும் தென்னை மரம்.

சாயங்காலம் பூஜை அறையில் சாமிப் படங்களுக்கெல்லாம் பூ வைத்துக் கொண்டிருந்தேன். அவள் வீட்டு வாசல் படிகளினூடே Two -wheeler ஏற்றுவதற்காக கட்டப்பட்டிருக்கும் slope -இல் சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தாள். வேகமாக சறுக்கி குப்புற விழுந்தாள். .

“அம்மா… ” என்று கத்திக் கொண்டே என்னிடம் ஓடி வந்தாள்.

“என்னடா கண்ணம்மா… ” என்றேன்.

“அம்மா.. நா ‘தொம்மா’ விழுந்துட்டேன்” என்று முகத்தை சுருக்கிக் கொண்டு அழ எத்தனித்தாள்.

“அச்சச்சோ.. அடி பட்டுதா? மா.. வலிக்கறதா?” என்றேன்.

“இல்லமா… தென்ன மரம் Dirty ஆயிடுத்து” என்று சொல்லிக் கொண்டே என் புடவைத் தலைப்பால் அவள் தலையைத் துடைத்துக் கொண்டாள்.

“அம்மா நன்னா துடைச்சு விடறேன்.. ஒன்னும் இல்லை.. சரி ஆயிடும்..” என்று சமாதனம் செய்து விட்டு விளக்கை ஏற்றினேன்.

“பட்டுக் குட்டி.. சுவாமிய நமஸ்காரம் பண்ணு” என்றேன்.

நமஸ்காரம் பண்ணுவதற்காக மண்டி இட்டவள் திடீரென்று யோசித்தாள்.

“அம்மா.. ராஜேஷ் மாமா சொன்னா… கீழ குனிஞ்சா தென்ன மரம் விழுந்துடுமாம்.. நீ பிடிச்சுப்பியா?” என்றாள்.

“சரி டா கண்ணா.. ” என்று சிரித்துக்கொண்டே தென்னை மரத்தை கையில் பிடித்துக் கொண்டேன். அவள் நமஸ்காரம் செய்தாள். தென்னை மரம் பட்டுப் போன்று மிருதுவாக இருந்தது.

இரவு என் அருகில் படுத்துக் கொண்டாள்.

“அம்மா.. கௌஷிக் மாமா.. நா தூங்கும் போது.. என் தலையில இருந்து தென்ன மரத்த scissorரிக்கோல் (Scissors + கத்தரிக்கோல்) வெச்சு வெட்டிருவானாம் மா..” என்று சிணுங்கினாள்.

என் புடவைத் தலைப்பை எடுத்து தென்னை மரத்தை சுற்றி மூடிவிட்டு என் மீது கால்களைப் போட்டுக் கொண்டு தூங்கினாள்.

எனக்குத் தான் தூக்கமே வரவில்லை. மறுநாள் நேற்றிக் கடன் செலுத்துவதற்காக திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்று அவளுக்கு முடி இறக்க (மொட்டை போட) முடிவு செய்திருந்தோம்.

குழந்தை எப்படியும் அழுவாள். எனக்குக் கலக்கமாக இருந்தது.

மறுநாள் காலையில் அவளுக்கு மாம்பழ நிறத்தில் பட்டு பாவாடை போட்டு விட்டேன். அன்று கோவிலுக்கு செல்வதால் நிறைய பூ வாங்கி வைத்திருந்தேன். அவளுக்கு தலையில் இரட்டைக் குடுமி போட்டு, இரண்டு தென்னை மரங்களையும் இணைக்கும் பாலம் போல் பூ வைத்து விட்டேன். அவள் ஓடிப் பொய் அலமாரியில் இருந்து இரண்டு Hair Clip - களை எடுத்து வந்து ..

“அம்மா… Mickey Mouse clip மாட்டி விடுமா.. ” என்றாள்.

நானும் அதை அவள் தலையில் குத்திவிட்டு எப்போதும் போல் தூக்கி கண்ணாடியில் காட்டினேன்.

“Mickey Mouse சூப்பரா இருக்கும்மா… ” என்றாள்.

நான் பூஜை சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். அவள் அப்பா குளித்து விட்டு வந்தார்.

“அப்பா…என்னத் தூக்கி கண்ணாடில காட்டுங்கோ… ” என்றாள். அவர் காட்டினார். “Mickey Mouse சூப்பரா இருக்கா? உங்களுக்கும் வேணுமாப்பா?” என்றாள். அப்புறம்.. “Boys எல்லாம் clip மாட்டிக்க கூடாது…” என்று அவளே பதிலையும் சொல்லி முடித்தாள்.

கோவிலில் முடி இருக்கும் இடம் நெருங்க நெருங்க எனக்கு பதற்றம் அதிகமானது.

அவள் அப்பாவின் தோளில் அவர் தலையின் இருபுறமும் காலைப் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவருடன் தலையை ஆட்டி ஆட்டி ஏதோ கதை பேசிக் கொண்டே இருந்தாள். தென்னை மரங்கள் இரண்டும் பட்டாம் பூச்சி சிறகடிப்பதைப் போல படபடத்தன. முடி இறக்கும் இடம் வந்தவுடன் இறங்கி என்னிடம் ஓடி வந்தாள்.

“அம்மா… அப்பா சொல்றாங்க… உம்மாச்சிக்கு(சுவாமிக்கு) தென்ன மரமே இல்லையாம்.. யாருமே தர மாட்டேங்கறாளாம்… உம்மாச்சி ஐயோ பாவம் இல்லையா? நா என்னோடத குடுக்கட்டுமா? அப்புறம்.. நீ ஆத்துக்கு(வீட்டுக்கு) போய் அழப்படாது….

நான் தினம் நிறைய மம்மம் சாப்பிடுவேனாம்… இன்னொரு புது தென்ன மரம் வளருமாம்..

சரியா மா? ”

என்று அவள் என்னை சமாதானம் செய்தாள்.

நான் அவளை கட்டி அணைத்துக் கொண்டு அவள் அறியாமல் என் கண்களைத் துடைத்துக் கொண்டேன்.

துளி கூட அழாமல் தன் அட்சயப் பாத்திரத்தை பகவானுக்கே படியளந்தாள் என் தேவதை.

மொட்டை போட்டவுடன் சமுத்திரத்தில் நீராடி விட்டு சுவாமி சந்நிதி நோக்கி நடக்கத் தொடங்கினோம். வழியில் ஒருவன் Dora clip விற்றுக் கொண்டிருந்தேன்.

“அப்பா..எனக்கு Dora clip வாங்கித் தாங்கோ” என்றாள்.

அவரும் சிறிதும் யோசிக்காமல் வாங்கிக் கொடுத்தார் எப்போதும் போல.

கற்பூரத் தட்டை ஏந்தி வந்த அர்ச்சகரிடம் பூச்சரத்தை கொடுத்துவிட்டு.. “பகவானே… இவ வீட்டுக்கு போய் மொட்டைத் தலையில Dora clip மாட்டி விடச் சொல்லி அடம் பிடிச்சா நா என்ன செய்வேன்?” என்று வேண்டிக்கொண்டிருந்தேன். அவள் அப்பா கற்பூரத்தட்டில் காணிக்கை அளித்தார்.

உடனே, அவள் அர்ச்சகரைப் பார்த்து,

“மாமா.. நீங்க தான் உம்மாச்சிக்கு Dress பண்ணி விடுவேளா? நா என்னோட முடிய உம்மாச்சிக்கு கொடுத்திருக்கேன்.. நீங்க அவருக்கு உச்சிக் குடுமி போட்டு..எங்க அம்மா கொடுத்த பூவ அத சுத்தி Round - ஆ வெச்சு.. இந்த Dora Clip மாட்டி விடுங்கோ.. சூப்பரா இருக்கும்.. ” என்று சொல்லி அதை கற்பூரத் தட்டில் போட்டு விட்டாள்.

“சரிடா கண்ணா.. ” என்று சொல்லி அவள் கன்னத்தைத் தட்டினார் அர்ச்சகர். நான் நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

“அப்பா… உம்மாச்சி Boy -ஆ girl -ஆ என்று சீரியஸாக டிஸ்கஸ் செய்து கொண்டே நடந்தாள்.

புதியதாய் தென்ன மரமும் Dora Clip - உம் கிடைத்த குதூகலத்தில் சந்நிதிக்கு உள்ளிருந்து குஷியாய்ப் புன்னகைத்தார் செந்திலாண்டவர்.

அன்புடன்,
தர்மா

4 comments:

Asha said...

இப்படி ஒரு அழகான கதையை மிகவும் அழகாகவும் தத்ரூபமாகவும் தந்த எங்கள் தர்மாவுக்கு என் மனமார்ந்த கோடான கோடி நன்றிகள் ..
உங்கள் படைப்புகளுக்காக என்றென்றும் காத்திருக்கும் உங்கள்அன்பு விசிறி ...

Asha said...

ஒரு குழந்தையின் குடுமியில்(தென்ன மரத்தில்) இவ்வளவு கதை சொல்ல முடியும் என்று இந்த சிறுகதையை படித்து தான் நான் தெரிந்து கொண்டேன் , தர்மா உங்கள் அறிவு வளம் பெருகும் வகையில் இந்த உலகத்தில் எவ்வளவோ கதைகள் குவிந்து கிடைக்கின்றன அவை அனைத்தையும் இன்னும் சிறப்பாக நீங்கள் இந்த ரசிகர்களுக்கு படைக்க வேண்டும் என்று விரும்பி கேட்டுக்கொள்கிறேன்

Unknown said...

Thanks for you comments & encouragement Asha dear...
But idhu konjam over build-up madhiri iruke... Vanja pughazhchiya? :appaviya muzhikara smily

Unknown said...

Kutti ma.. story is really cute.. comparison of kudimi to thennai maram is so nice.

I really liked the following lines
ஈ.. எறும்புகளுக்கு எல்லாம் படியளக்கும் அட்சயப் பாத்திரமாகும் தென்னை மரம்

அவளுக்கு தலையில் இரட்டைக் குடுமி போட்டு, இரண்டு தென்னை மரங்களையும் இணைக்கும் பாலம் போல் பூ வைத்து விட்டேன்.

Oru Chennla kutti pathina intha kuttima voda karpanai super.