எங்கள் ஊரில் எல்லாம் பேரூந்துகள் ஆற அமர நிறுத்தங்களில் நின்று செல்லும். சில சமயங்களில் சிறிது நேரம் உட்கார்ந்து கூடச் செல்லும்.
எப்படியோ அடித்துப் பிடித்து உள்ளே ஏறிய பின்னர் அருகில் இருப்பவர்கள் இலவசமாக மசாஜிங் அயர்னிங் எல்லாம் செய்து முடிப்பார்கள். பயணச்சீட்டு வாங்குவதற்கு நடத்துனருக்கு பணத்தை பாஸ் செய்ய வேண்டும். அதை வழியிலேயே ஆட்டயப்போடும் ஆசாமிகளும் உண்டு.
சில நேரங்களில் நிறுத்தங்களுக்கு முந்தைய சிக்னலில் வண்டி நிற்கும்போதே நாம் இறங்கிக் கொள்ள வேண்டும். நிறுத்தம் வந்தவுடன் நிப்பாட்டச் சொன்னால் “அதான் அவ்ளோ நேரம் சிக்னல் - அ நின்னுச்சுல.. எறங்கிருக்க வேண்டி தானே..” என்று நடத்துனர் வாழ்த்துமடல் வாசிப்பார் … சில சமயங்களில் “சிக்னல்-ல ஏம்மா எறங்கற… ஸ்டாப் வர்ற வரைக்கும் பொறுக்க முடியாதா” என்றும் கூறுவார்.. அவருடைய மன நிலையைப் பொறுத்து…
இவ்வாறாக பேரூந்து நெரிசலில் சிக்கி அலுவலகம் வந்து செல்லும் பொழுது பல சுவாரஸ்யமான சம்பவங்களை காண நேரிடுகிறது. அவற்றுள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
------------------------------------------------------------------------------------------------------------------
களம்: M7 பஸ் - கிண்டி to வேளச்சேரி பயணத்தின் போது.
ஒரு இருக்கையில் ஒரு நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமியும் அவள் அருகில் அவளுடைய இரண்டாம் வகுப்பு படிக்கும் சகோதரனும் அமர்ந்து கொண்டு பயணம் செய்தார்கள். அருகில் ஒரு ஆன்டி நின்று கொண்டிருந்தார். பஸ்-இல் வசதியாக நிற்கும் அளவுக்கு நெரிசல் சற்று குறைவாகத் தான் இருந்தது. ஆன்டி - உம் சற்றே திடமாகத் தான் இருந்தார்.
ஆன்டி (சிறுமியிடம்): “பாப்பா… ஆன்டி- க்கு வயசாச்சுல்ல.. கொஞ்சம் தள்ளி உக்காரும்மா …நானும் உங்க கூட உக்கார்ந்துக்கறேன்…”
சிறுமி: “நாங்க கூடத்தான் தினம் காலையில பெரிய Bag - ஆ தூக்கிட்டு கூட்டத்துல இடி பட்டு மிதி பட்டு நிக்க முடியாம வரோம். அப்போ .. யாரவது.. நாங்க சின்ன பசங்களே .. பாவமே-ன்னு நெனச்சு .. இடம் குடுக்கறீங்களா? இடம் எல்லாம் தர முடியாது போங்க ..”
மொத்த பேரூந்தும் குலுங்கி குலுங்கி சிரித்தது …
-------------------------------------------------------------------------------------------------------------------
என்றாலும் அந்த குழந்தையின் பேச்சு சிந்திக்க கூடிய கருத்தாகும் …
தினமும் காலையில் பள்ளி மாணவர்கள் ஒரு பெரிய பொதி மூடியை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நெரிசலில் சிக்கி சிதைந்தும் படிக்கட்டில் தொங்கிக் கொண்டும் பயணம் செய்கிறார்கள்…
காலை உணவில் சேகரித்த மொத்த சக்தியும் இந்த பயணத்திலேயே விரயமாகி விட்டால் எப்படி முழு கவனத்துடன் பாடங்களை கவனித்து உள்வாங்கி படிப்பார்கள்?
வருங்கால இந்தியாவின் தூண்கள் அஸ்திவாரத்திலேயே வலுவிழந்தால் வல்லரசை நோக்கிய நமது கனவு நினைவாகுவது எப்படி?
ஏற்கனவே அரசாங்கம் பள்ளி குழந்தைகள் இலவசமாக பயணம் செய்ய பஸ் பாஸ் வழங்கி உள்ளது. ஆனால் சில நடத்துனர்கள் (நான் எல்லோரையும் கூறவில்லை) இலவசமாக பயணம் செய்யும் குழந்தைகளை இழிவாக நடத்துகிறார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு முறை எங்கள் ஊரில், பள்ளி செல்லும் எட்டு வயது சிறுமி ஒருத்தி அவள் தம்பியுடன் ஒரு தனியார் வண்டியில் ஏறிவிட்டாள். அங்கு அவளுடைய பஸ் பாஸ் செல்லாது என்பதை புரிந்து கொள்ளும் வயது அவளுக்கில்லை. அந்த ஏழைக் குழந்தையிடம் பணமும் இல்லை. அந்த நடத்துனர் குழந்தை என்று கூட பாராமல் குரூரமாகத் திட்டினான். ரோஜாவைப் போன்ற முகம் சருகாய் வாடியது. அவளுடைய தம்பிக்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. பயணிகள் பலர் அவளுக்கு பயணச்சீட்டு வாங்கித் தர முன் வந்தார்கள். அதற்குள் அவள் இறங்கிவிட்டாள் எல்லோர் மனதையும் பிசைந்தபடி..
-----------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு என்ன செய்யலாம்..??
- தினமும் காலை நேரங்களில் (விடுமுறை நாட்கள் தவிர) பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு என்று தனியாக பேரூந்துகளை இயக்கலாம்.
- பேரூந்துகளில் மகளீருக்கு என்று தனியாக இருக்கைகள் ஒதுக்கப் பட்டிருப்பதைப் போல பள்ளி செல்லும் குழைந்தைகளுக்கு என்று பிரத்தியேகமாக இருக்கைகளை ஒதுக்கலாம்.
- நாம் கர்ப்பிணிப் பெண்களுக்கும் முதியவர்களுக்கும் எழுந்து கொண்டு நம் இருக்கையை கொடுப்பதைப் போல பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் நாம் எழுந்து கொண்டு நம் இருக்கையைக் கொடுக்கலாம்.
- எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களை கொஞ்சம் கனிவாக நடத்தலாம்.
நம் பாரத மாதாவின் சின்னச் செல்லக் குட்டீஸ் சுட்டீஸ் எல்லோரையும் நம் வீட்டுக் குழந்தைகளாய் நேசிப்போம்.
நண்பர்களே உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளயும் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.
சற்றே பெரிய பதிவாயினும் தங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு முழுமையாய் படித்தமைக்கு நன்றி.
சிந்தனையுடன்,
தர்மா