மௌனம், சிரிப்பு மற்றும் அழுகையை மட்டுமே மொழியாய் அறிந்தவளின் உலகத்தில் புதியதாய் ஒரு வார்த்தை பிரவேசித்து விட்டது. "அக்க்க்..கா .... " என்று மிக அழுத்தமாக அழைத்துக்கொண்டு Hostel Dining Hall- க்குள் எட்டிப் பார்த்தாள் நவீனா.
உடனே அவளை இளவரசி அக்கா அங்கிருந்து அடித்து இழுத்துச் சென்றாள். குழந்தை "வீல்.." என்று அழுதுகொண்டு அவளிடமே சென்றது. நாங்கள் பரிதாபமாய் பார்த்தோம்.
"பாப்பா உள்ள சூ.. சூ.. போச்சுன்னா ஓனர் திட்டுவார்மா... எவ்ளோ அடிச்சாலும் அழுதுகிட்டு அது எங்கிட்டயே தான் திரும்ப வருது.. அதுக்கு என்னத் தவிர வேற யாரையும் தெரியாது மா ..." என்று சொல்லி விசும்பினாள் இளவரசி அக்கா.
இளவரசி அக்கா காதலனால்/கணவனால் கைவிடப்பட்டு பெற்றோர்களாலும் கைகழுவப்பட்ட பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் இல்லத்தில் குழந்தையுடன் வசித்து வந்தாள். எங்கள் Hostel- இல் துப்பரவு தொழில் செய்ய நியமிக்கப்பட்டாள்.
நவீனாவுக்கு பிடித்தமான மற்றொரு விஷயம் அவளை ஒத்த குழந்தைகள். எங்கள் Hostel ஓனரின் பேரக் குழந்தைகளுக்கும் அவளை மிகவும் பிடிக்கும். ஆனால் ஏனோ ஓனர் அக்குழந்தைகளை அவளுடன் சேர விடுவதில்லை. அதன் பின்னால் இருக்கும் நியாயமான காரணத்தை என்னால் இதுவரை ஊகிக்க முடியவில்லை.
நவீனா அவள் தாயையே எப்போதும் சுற்றி வருவதால் இளவரசி அக்காவால் சரிவர வீட்டு வேலைகளை செய்ய முடியவில்லை. அவள் பெற்றோர்களும் தங்கள் விருப்பத்திற்கு மாறாக காதலித்ததை காரணம் காட்டி அவளை நிராகரித்தனர். நவீனாவின் தந்தை தன் பெற்றோர்களின் பேச்சை மீறாமல் வேறு திருமணம் செய்து கொண்டு சுகமாக வாழ்கிறான். வேறு வழியில்லாமல் இளவரசி அக்கா மறுபடியும் அந்த இல்லத்திலேயே தஞ்சம் புகுந்தார்.
"காதல் தோல்வியில் எங்காவது பெண்கள் தாடி வளர்த்தோ தண்ணி அடித்தோ பார்த்திருக்கிறீர்களா" என்று பல ஆண்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.
பெண்ணுக்கு கருவறை இல்லாமல் இருந்திருந்தால், அதில் காதலன் கொடுத்துச் சென்ற குழந்தை இல்லாமல் இருந்திருந்தால், அதை உழைத்துக் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் இல்லாமல் இருந்திருந்தால் .. பெண்களும் கூட தாடி வளர்த்து, தண்ணி அடித்து.. காதல் பட முருகனைப் போல 'ஞ .. ஞ.." என்று தலையில் அடித்துக் கொண்டு திரிந்திருப்பார்கள்...
என்ன சொல்கிறீர்கள்???????